What Makes "Monkey Pedal" Special? Sivakarthikeyan Tells All

மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் ஆகியோர் தயாரிக்க, சஞ்ஜய் ஜெயகுமார் மற்றும் கலையரசு இணைந்து தயாரித்து இருக்கும் படம் குரங்கு பெடல். இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்க கமலக்கண்ணன் மற்றும் பிரபாகர் சண்முகம் இணைந்து தயாரித்துள்ளனர். காளிவெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், ரதிஷ், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், சாய்கணேஷ், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் ஆகியோர் குரங்கு பெடல் படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவும், பிரபாகர் சண்முகம் வசனமும் எழுதி உள்ளனர். குரங்கு பெடல் படம் இந்த வாரம் மே 3ம் தேதி வெளியாக உள்ளது.

1980 காலகட்டத்தில் நடக்கும் இந்த கதையில் கத்தேரி கிராமத்தில் உள்ள சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கும், கோடை விடுமுறையில் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள துடிக்கும் மகனுக்கும் இடையிலான உறவை பற்றி இந்த படம் பேசுகிறது. ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. கோடை பள்ளி விடுமுறையில் 4 சிறுவர்கள் இந்த விடுமுறையில் நன்கு ஊரை சுற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்போது அவர்களுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. உடனே அந்த ஊரில் இருக்கும் மிலிட்டரி என்று அழைக்ககூடிய பிரசன்னாவிடம் சைக்கிளை வாடகைக்கு எடுக்கின்றனர். ஆனால் தினசரி சைக்கிளை வாடைக்கு எடுத்து ஓட்ட காசு இல்லாததால் காளிவெங்கட் பையன் மாரியப்பன் வீட்டில் இருந்து பணத்தை திருடி செல்கிறான்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தை காளிவெங்கட் மகனு தனக்கு தெரியாமல் கொஞ்ச நாளாக சைக்கிள் வாடகைக்கு வந்ததை தெரிந்து கோபப்படுகிறார். அதன் பிறகு அப்பாவிற்கும் மகனுக்கு இடையே நடக்கும் சண்டையை உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் படம் தான் குரங்கு பெடல். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கும் எதார்த்தமான ஒரு படம் குரங்கு பெடல். படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். காளி வெங்கட் நடராஜா சர்வீஸ் கந்தசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது அநீதி படத்தில் நடித்த அப்பா கதாபாத்திரத்தின் மற்றொரு வடிவம் என்று கூட சொல்லலாம். மறுபுறம் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் போன்றவர்களும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

சைக்கிள் கடையில் நடக்கும் காட்சிகள், மாரியப்பனை காணவில்லை என்று இரவு தேடும் காட்சி, மார்க்கெட்டில் முட்டையை விற்கும் காட்சி, தனி ஆளாக சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் காட்சி என நிறைய இடங்கள் படத்தில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சுமீ பாஸ்கரன் ஒளிப்பதிவும், பிரபாகர் சண்முகம் வசனமும் படத்திற்கு ஏற்றார் போல இருந்தது. சொந்த ஊரை விட்டு வெளியூரில் வந்து வேலை பார்த்து கொண்டிருக்கும் 80’s மற்றும் 90’s கிட்ஸ்களுக்கு இந்த படம் நிச்சயம் பல கடந்த கால நினைவுகளை தூண்டும்.