கோதுமை மாவு, அரிசி மாவில் வருடம் முழுவதும் வண்டு, புழு வராமல் இருக்க..!

அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றில் வண்டு, புழு வைத்துவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்தவே முடியாது.

அப்படி இல்லாமல் அந்த மாவு எப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கடைகளில் வாங்கினால் கட்டுப்படியாகாது என்பதால் கோதுமை மாவு, அரிசி மாவு, உள்ளிட்டவைகளை மக்கள் அரைத்துக் கொள்கிறார்கள். அதாவது கோதுமை, அரிசியை சுத்தம் செய்து காய வைத்து மாவு மில்லில் கொடுத்தால் அரைத்து கொடுத்துவிடுகிறார்கள்.

ஒரு சிலர் இட்லி, தோசைக்கு அவ்வப்போது மாவு அரைக்க வேண்டியிருக்கிறதே என்பதற்காக அரிசி, வெந்தயம், உளுந்தை கழுவி காயவைத்து அரைத்து தேவையான நேரத்தில் அதில் தண்ணீர் கலந்து புளிக்க வைத்து பிறகு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அது போல் கேழ்வரகு மாவு, ஓட்ஸ் மாவு உள்ளிட்டவைகளையும் அரைத்து வைத்துக் கொள்கிறார்கள். அது போல் முறுக்கு பிழியும் மாவையும் அரைத்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பொதுவாக இவ்வாறு அரைக்கும் போதும் வெள்ளை மாவுகளில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் ஆனாலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனால் முழுக் கோதுமை மாவு, பசையம் இல்லாத மாவுகள் குறைந்த நாளே கெடாமல் இருக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன.

மாவில் வண்டு வைத்துவிட்டால் அதை சிலர் சலித்து பயன்படுத்துவார்கள். ஆனாலும் அதில் பூச்சி வாடை அடிக்கும் என்பதால் சிலர் அப்படியே தூக்கி கொட்டிவிடுவார்கள். ஈரம் இல்லாமல் அரைத்து வைக்கப்படும் உலர்ந்த மாவு பொருள் எப்படி கெட்டு போகும் என்பதே பலருக்கு ஆச்சரியம் அளிக்கும்.

மாவு கெட்டு போவதற்கான காரணங்கள் என்ன தெரியுமா?

மாவின் மேல் காற்று படுவது, எனவே காற்று படாமல் இறுக்கமான மூடி கொண்ட பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும். மூடி இறுக்கமாக இருந்தால் பூச்சிகள் நுழையாது. மாவு காற்றில் படும்போது அதில் ஆக்சிடேஷன் நடக்கும். இதனால் மாவு கெட்டு போகும்.

அது போல் மாவுகளை அவ்வப்போது வெயிலில் காய வைத்து டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். ஈரப்பதத்துடன் வைத்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும்.

மாவில் பூச்சிகள் இருந்தால் அதை பயன்படுத்தவே பிடிக்காது. அதை பயன்படுத்துவதும் பாதுகாப்பானதல்ல. ஏனென்றால் பூச்சிகள் எச்சங்கள் அதில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாவு வைத்திருக்கும் பாத்திரங்களில் பிரிஞ்சி இலை, கிராம்பு போட்டு வைக்கலாம். இவை இருந்தால் பூச்சிகள் வராது.

அது போல் மாவு கெடாமல் இருக்க அதை நாம் எப்படி பத்திரப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். மாவை அறையின் சாதாரண வெப்பநிலையில் 6 முதல் 8 மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். பிரிட்ஜில் வைத்தால் ஒரு ஆண்டு வைத்தாலும் ஒன்றும் ஆகாது. ப்ரீசரில் வைத்தால் 2 ஆண்டுகள் வரை மாவை பாதுகாக்கலாம்.

எப்போதும் மாவுகளை குளிர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி மாவை பயன்படுத்தாவிட்டால் ப்ரீசரில் வைக்கலாம், காற்று, ஈரம் புகாத பாத்திரங்களில் வைக்க வேண்டும். இதனால் அதன் தரம் கூட குறையாமல் 2 ஆண்டுகள் வரை அப்படியே நீடிக்கும்.

மாவுகளை இருப்பு வைக்கும் போது, பழைய மாவில் மேலும் மேலும் புதியதை கொட்டிக் கொண்டே வரக் கூடாது. பழைய மாவை காலி செய்துவிட்டோ அல்லது வேறு பாத்திரத்தில் கொட்டி வைத்தோ பயன்படுத்த வேண்டும். அது போல் மாவு வைக்கும் பாத்திரங்களில் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும்.

மாவில் பூச்சி, வாசனையின்மை, நிறமாற்றம் என்றால் அந்த மாவை பயன்படுத்தாதீர்கள். பிரிட்ஜ், ப்ரீசரில் வைத்தாலும் மாவை பயன்படுத்தும் முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக சலித்துக் கொள்ளவும்.