எங்கே தமிழ்?

தமிழ்நாடு அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இணையாக வளர வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் அனைவரின் விருப்பமும் ஆகும். சென்னை மாநகர சாலைகளிலும், வணிக வீதிகளிலும் செல்லும்போது லண்டனிலும், வாஷிங்டனிலும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. காரணம், சென்னை மாநகரம் அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது என்பதல்ல, சென்னை மாநகரத்தில் எந்தத் திசையில் திரும்பினாலும் ஆங்கிலத்தில் மின்னும் பெயர்ப் பலகைகள்தான்.

‘‘இனிய உளவாக இன்னாத கூறல் கனி
இருப்பக் காய்கவர்ந் தற்று’’
என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ற வகையில் தமிழக மக்கள் கனியை தவிர்த்துவிட்டு காயைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். அமிழ்தினும் இனிய தமிழ் இருக்க ஆங்கிலம்தான் அவர்களைக் கவர்ந்து இருக்கிறது. அதனால்தான் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். இந்தக் கொடுமைகளைப் பார்க்கும்போது தீராத துயரம் ஏற்படுவதாக பாரதிதாசன் அவரது கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘‘வாணிகம் தம் முகவரியை
வரைகின்ற பலகையில்
ஆங்கிலமா வேண்டும்?
வானுயர்ந்த செந்தமிழால்
வரைக என அன்னவர்க்குச்
சொல்ல வேண்டும்!
ஆணி விற்போன் முதலாக
அணிவிற்போன் ஈறாக
அனைவர் போக்கும்
நாணமற்ற தல்லாமல்
நந்தமிழின் நலங்காக்கும்
செய்கை யாமோ?
உணவுதரு விடுதிதனைக்
“கிளப்’என வேண்டும் போலும்
உயர்ந்த பட்டுத்
துணிக்கடைக்கு “சில்குஷாப்’
எனும் பலகை தொங்குவதால்
சிறப்புப் போலும்
மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை!
தணிப்பரிதாம் துன்பமிது
தமிழகத்தின் தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை’’

சென்னை மாநகரத்தின் சாலைகளில் பயணிக்கும்போது பாரதிதாசனுக்கு ஏற்பட்ட அதே உணர்வுதான், இப்போதும் ஏற்படுகிறது. அவருக்கு தணிப்பதற்கு அரிதான துன்பம் ஏற்பட்டதைப் போலவே எனக்கும் துன்பம் ஏற்பட்டது. பின்னர் அது கோபமாக மாறியது. அதன் விளைவாகத்தான் ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்தேன். அந்த இயக்கத்தின் மூலம் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை தார் பூசி அழித்தோம். அதிசயம். ஆங்கில எழுத்துகளை தார்பூசி அழித்தவுடன் அந்த இடத்தில் தமிழ் பெயர்கள் முளைத்தன. ஆனால், அதன்பின்னர் நிலைமாறியது. இப்போது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் முளைத்துள்ளன.

பாரதியாரின் கோபம்

பாரதியார் வாழ்ந்த காலத்தில் அவரது ஊருக்கு அருகில் வாழ்ந்த வரலாற்று ஆசிரியரான நீலகண்ட சாஸ்திரிகள்தான் ‘‘மெல்லத் தமிழ் இனி சாகும்’’ என்று கூறினார். இதனால் கோபடைந்த பாரதியார், நீலகண்ட சாஸ்திரிகளை கடுமையாக விமர்சிக்கும் வகையில், “இயற்கையின் பல் நுட்பங்களை வெளிப்படுத்தும் புதிய கலைகள் மேற்கே வளர்கின்றது. அத்தகைய கலைகள் தமிழில் இல்லை; அதைத் தமிழில் எவரும் படைப்பதும் இல்லை; அதைத் தமிழில் சொல்லுவதற்கு தமிழில் வளமும் இல்லை, என்று அந்தப் பேதை மாந்தன் உரைத்தான். இதை அவன் எனக்கு உரைத்தல் தகுமோ? எட்டுத்திக்கும் சென்று கலைச்செல்வங்கள் கொண்டுவந்து தமிழை வளர்ப்பீர். தந்தை சிவனின் அருளாலும், புலவர்களின் தவத்தின் வலிமையாலும் இந்தப் பழி தீரும். என்றுமே தமிழ் புவியில் புகழுடன் திகழும்” என்று பாடினார். இதைக்கூட புரிந்து கொள்ளாமல் தமிழை அழிக்க பாரதியாரையும் துணைக்கு அழைக்கிறார்கள்.

தமிழ் இனி சாகும் என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறியதற்கு அவ்வாறு கோபப்பட்ட பாரதியார் இப்போது இருந்திருந்தால் சாஸ்திரிகளின் கருத்தை வேதனையுடன் ஒப்புக்கொண்டிருப்பார். காரணம் தமிழ் இப்போது தமிழர்களாலேயே முதுகில் குத்தி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கன்னித் தமிழும், பண்ணித் தமிழும்!

கன்னித் தமிழ் என்று போற்றப்படும் தமிழ் இப்போது என்ன பாடுபடுகிறது என்பதை விளக்க காசி ஆனந்தன் வேடிக்கையாக ‘‘நாங்கள் கன்னித் தமிழ் பேசினோம். ஆனால், இன்றைய இளைஞர்கள் கட் பண்ணி, மீட் பண்ணி, பிரஸ் பண்ணி, வாக் பண்ணி, பேப்பர் ரீட் பண்ணி, டிபன் பண்ணி, வொர்க் பண்ணி என்று பண்ணித் தமிழ் பேசுகிறார்கள்’’ என்று கூறுவார்.

ஆங்கிலம் பேசாத நாடுகள்

உலகில் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளைத் தவிர பிறநாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதில்லை. பிரான்ஸ், சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் ஆங்கிலம் இல்லை. தாய்மொழிக்குத்தான் முதலிடம் தரப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஆங்கிலத்துக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.

ஜெர்மனியில், ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என கேட்டாராம். ஜெர்மன் மாணவர்கள் ஜெர்மன், பிரெஞ்சு என அதிகபட்சமாக இரண்டு என பதிலளித்தனர். அவ்வகுப்பில் இருந்த ஒரு புலம்பெயர்ந்த தமிழ் சிறுமி எனக்கு மூன்று மொழிகள் தெரியும் என்றாள்.அவளை பாராட்டிய ஆசிரியர் என்னென்ன என கேட்டார். அவள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு என்றாள்.

உன் தாய் மொழி என்ன என்று ஆசிரியர் கேட்டார். “தமிழ்” என்றாள் அந்த சிறுமி. நீ சொல்லிய மொழிகளில் தமிழ் இல்லையே என்றார் அவர். ஆம், எனக்கு தமிழில் சில வார்த்தைகள் மட்டுமே தெரியும் மற்றபடி மொழி தெரியாது என்றாள் அந்த சிறுமி. அதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியர், ‘‘ச்சீ!,தாய் மொழி தெரியாது என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா? தாய் மொழி தெரியாத நீ மற்ற மொழிகளையும், விஞ்ஞானத்தையும் எப்படி படிப்பாய், எப்படி புரிந்து கொள்வாய். உன் சிந்தனை ஆற்றல் எப்படி வளரும்’’ என்று திட்டியிருக்கிறார். மேலும், உன் தாய் மொழியை கற்றுக்கொள்ளும் வரை என் வகுப்பில் நீ உட்காராதே என்று வெளியில் அனுப்பினாராம்.

இதிலிருந்து இரு உண்மைகள் தெரிகின்றன. ஜெர்மானியர்கள் இரு மொழிகளை கற்றிருந்தாலும், அதில் ஒரு மொழி அவர்களின் தாய்மொழியாக உள்ளது. ஆனால், ஜெர்மனியாக இருந்தாலும், தமிழ்நாடாக இருந்தாலும் நாம் 3 மொழிகள் கற்றுக்கொண்டாலும் அதில் தாய்மொழிக்கு இடம் இருப்பதில்லை. இதுதான் நமது தமிழ் மொழிப்பற்று ஆகும்.

தமிழகத்தில் இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்?

1937ஆம் ஆண்டு ராஜாஜி ஆட்சியிலும், 1965ஆம் ஆண்டு பக்தவச்சலம் ஆட்சியிலும் இந்தி திணிக்கப்பட்டது. இது மன்னிக்கவே முடியாத மொழித் தாக்குதல். அதனால்தான் இந்தி திணிப்புக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் பொங்கி எழுந்தது. இந்தியைத் திணித்த காங்கிரஸ் ஆட்சியிலும்கூட தமிழுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தமிழ் வழிக் கல்வி முறை மட்டும்தான் இருந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்தான் ஆங்கில வழிக் கல்விக்கு கதவு திறக்கப்பட்டது. ஆங்கில வழியில் கற்பிக்க தனியாக பள்ளிகளைத் தொடங்கியதும், அவற்றுக்காக மெட்ரிக் பள்ளிகள் என்ற தனி வாரியத்தை ஏற்படுத்தியதும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில்தான்.

இப்போதும் தமிழை வாழ வைப்பதாகக் கூறிக்கொண்டு பலர் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தமிழ் வாழவில்லை.

தமிழை வளர்த்தவர்களையும், தமிழை வீழ்த்தியவர்களையும் இளைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் ; தமிழ் செழிக்க செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று எண்ணியதன் வெளிப்பாடுதான் ‘‘எங்கே தமிழ்?’’ என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரைத் தொடர். படியுங்கள் தமிழின் எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்…
– டாக்டர் ராமதாஸ்.