புதிய நிதியாண்டில் யாரெல்லாம் வரி செலுத்த வேண்டாம்!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளார். புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு உங்கள் வரியைச் சேமிக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி விதிகளில் அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. புதிய நிதியாண்டில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்துவிட்டன. எந்தெந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

புதிய வரி விதிப்பில் கவனம் செலுத்தி, மத்திய அரசு பொது மக்களுக்கு ரூ.7 லட்சம் வரை வரி விலக்கு அளித்துள்ளது. இதனுடன், பல வகையான வரிச் சலுகைகளும் கிடைக்கும். ஏப்ரல் 1, 2023 முதல், புதிய வரி விதிப்பு இயல்புநிலை வரிவிதிப்பு முறையாக (டீஃபால்ட் டேக்ஸ் ரெஜிம்) மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, ஐடிஆர் போர்ட்டலில் உள்ள முழு வடிவமும் புதிய வரி விதிப்பு முறையின்படிதான் இருக்கும்.

நீங்கள் பழைய வரி முறையில் வரி தாக்கல் செய்திருந்தால், அதற்கான தேர்வை நீங்கள் தனித்தனியாக செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனுடன், பழைய வரி முறையிலும் வரி தாக்கல் செய்யும் வசதியும் உங்களுக்கு இருக்கும். தற்போது, முதலீடு, வீட்டு வாடகை கொடுப்பனவு (ஹெச்ஆர்ஏ) போன்ற விதிவிலக்குகளுடன் கூடிய பழைய வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய வருமான வரி ஸ்லாப்பில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சமாக இருந்தால், தள்ளுபடியுடன் நீங்கள் எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை. புதிய வரி விதிப்பில், அடிப்படை விலக்கு வரம்பு (வரியில்லா வரம்பு) ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி இல்லை என்றிருந்தது. அதே நேரத்தில், 6 வரி அடுக்குகளுக்கு பதிலாக, இப்போது 5 வரி அடுக்குகள் இருக்கும். இதில் ரூ.5 லட்சத்திற்கு பதிலாக ரூ. 7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு தள்ளுபடியுடன் வரி விலக்கு அளிக்கப்படும். இது தவிர, புதிய வரி விதிப்பில் ரூ.15.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு நிலையான விலக்கு, அதாவது ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனின் பலனும் கிடைக்கும். இது ரூ.52,500 ஆக இருக்கும்.