கடந்த 2005 ம் ஆண்டு ரஜினி, ஜோதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறிய திரைப்படம் சந்திரமுகி. இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகி இருக்கிறது சந்திரமுகி பாகம் 2.
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தையும் இயக்குனர் பி. வாசுவே இயக்கி இருக்கிறார்.
முதல் பாகத்திற்கு இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையமைத்த நிலையில், இந்த பாகத்திற்கு பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களுக்கு இசையமைத்து, ஆஸ்கார் வரைக்கும் சென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து இருக்கிறார். ரங்கநாயகி( ராதிகா) குடும்பத்தில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் அரங்கேற, குடும்ப குரு, குல தெய்வ கோயிலுக்கு சென்று பூஜை செய்தால்தான் எல்லா பிரச்சினை களும் சரியாகும் என்று சொல்கிறார்.
இதில், வீட்டை விட்டு மதம் மாறி கல்யாணம் செய்து கொண்ட இறந்து போன மகளின் குழந்தைகளும், அவருக்கு பாதுகாவலனாக இருக்கும் பாண்டியனும் (ராகவா லாரன்ஸ்) இணைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
அனைவரும் குல தெய்வ கோயிலுக்கு அருகில் உள்ள வேட்டையபுரம் அரண்மனையில் தங்குகின்றனர். எல்லாரும் எதிர்பார்த்தது போல சந்திரமுகி அறைக்குள் ஒருவர் போக, அவள் அவரது மீது அப்பிக்கொள்கிறாள். அதன் பின்னர் என்ன ஆனது என்பது மீதிக்கதை. சந்திரமுகி முதல் பாகத்தை பொருத்த வரை, அதன் பெரும் பலமாக இருந்தது வடிவேலுவின் காமெடியும், சந்திரமுகி சம்பந்தபட்ட காட்சிகளும்.
இந்த பாகத்தில் வடிவேலுவின் காமெடி பெரும்பாலான இடங்களில் செயற்கையாக அமைந்து இருந்தது. குறிப்பாக கடந்த பாகத்தில், ரஜினியும் வடிவேலுவும் பேயை பற்றி பேசுவது போன்ற காட்சி ஒன்று இதிலும் வருகிறது. அந்தக்காட்சியில் அவ்வளவு செயற்கைத்தனம்.
ராகவா லாரன்ஸின் நடிப்பு காமெடி சம்பந்தமான காட்சிகளில் பெரிதாக ஈர்க்க வில்லை என்றாலும், வேட்டையன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். கங்கனாவின் நடனம், அழகு எமோஷன் என எல்லாம் ஒர்க் அவுட் ஆனாலும் கூட, அவரால் ஜோதிகா அளவிற்கு ஈடுகொடுத்து நடிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். இதற்கிடையில், லட்சுமி மேனன் நானும் இருக்கிறேன் என்று சந்திரமுகியாக மாறி வெளிப்படுத்திய நடிப்பு அசத்தல்.
இயக்குனர் பி. வாசு காமெடி சம்பந்தமான காட்சிகளில் கோட்டை விட்டாலும், அதனை சந்திரமுகி சம்பந்தமான காட்சிகளில் அதனை சமன் செய்து விடுகிறார். குறிப்பாக வேட்டையனையும் சந்திரமுகியையும் அருகே அருகே வைத்துக்கொண்டு அவர் எழுதிய டிராமா நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதுதான் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது.
சந்திரமுகி சம்பந்தமான காட்சிகளில் தெலுங்கு மொழியை எந்த நெருடலும் இல்லாமல் பயன்படுத்தி இருந்தது அந்தக் கதாபாத்திரத்துக்கு மேலும் உண்மை தன்மையை சேர்த்து இருந்தது. ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பயத்தைக்கொடுக்கிறது.கீரவாணியின் பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்து இருக்க வேண்டும். பாடல்கள் ஒன்று கூட ஒட்டவில்லை. படத்திலும் எந்த புதுமையும் இல்லாமல் இருந்து பலவீனம்.
அதே தோசை கல்லில், புளிக்காத மாவு ஊற்ற முயற்சித்திருக்கிறார் பி.வாசு! அனைத்து சினிமா செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு கிடைக்க இந்த லிங்கை க்ளிக் செய்து எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையலாம்!