நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. இதில் அதானி முறைகேடு, மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை போன்ற பிரச்சினைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதனால் இரு அவைகளிலும் குறிப்பிடத்தக்க அலுவல்கள் நடைபெறவில்லை.
குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்படி இந்த தொடர் கடைசி வாரத்தை எட்டி இருக்கிறது.
இந்த வாரத்தில் முக்கியமாக, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் அரசியல் சாசன (129-வது திருத்தம்) மசோதா மற்றும் இந்த தேர்தலுடன் யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் இணைந்து தேர்தல் நடத்த வகை செய்யும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய இந்த 2 மசோதாக்களுக்கும் கடந்த வாரம் மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து இருந்தது.
இவற்றை மக்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டு இருந்தது. இந்த மசோதாக்களின் நகல்கள் கடந்த வாரம் உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த மசோதாக்கள் மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மாறாக இந்த வார இறுதியில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
மக்களவையின் மாற்றியமைக்கப்பட்ட அலுவல் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டு இருந்தது. இதில் இன்றைக்கான அலுவல்களில் மேற்படி மசோதாக்கள் இடம்பெறவில்லை.
மாறாக துணை மானியக்கோரிக்கைகள் இன்று தாக்கல் செய்யப்படும் என அந்த பட்டியலில் கூறப்பட்டு இருந்தது. அவை நிறைவேற்றப்பட்ட பின் மேற்படி மசோதாக்களை அரசு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.
அதேநேரம் துணை அலுவல் பட்டியல் மூலம் சபாநாயகரிடம் அனுமதி பெற்று கடைசி நேரத்திலும் மசோதாக்களை அரசு தாக்கல் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.