கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் உதயநிதி செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறை அமைச்சர், இளைஞர் நலத்துறை அமைச்சர் என பொறுப்பு வகித்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு அவர் தான் துணை முதலமைச்சர்,” என்றார். அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதன் பின்னர், துணை முதல்வர் பதவி குறித்த பேச்சுகள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணத்தை ஒட்டி மீண்டும் விவாதம் கிளம்பியுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருப்பதால், அந்தக் காலகட்டத்தில் முதல்வரின் பொறுப்புகளைக் கவனிக்கும் வகையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா எதிர்பார்ப்பு திமுகவில் ஒரு தரப்பினரிடையே மீண்டும் எழுந்துள்ளது.
துணை முதல்வர் பதவி குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து, பிரபல நியூஸ் சேனலில் பேசிய தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன், “முதல்வருக்கு துணையாக ஒருவர் வேண்டும் என்பது கட்சியினர் மத்தியில் கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும் போது, அமைச்சரவை கூட்டங்களை நடத்துவதற்கு ஒருவர் வேண்டும் என பேசப்பட்டது.
அந்த அடிப்படையில், துணை முதல்வர் பதவி தொடர்பான பேச்சுகள் எழுகின்றன. இந்த தேதியில் பதவியேற்பார் என்பதெல்லாம் யூகங்களின் அடிப்படையில் பேசக் கூடியவை தான்.”என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் “ஒருவருக்கு பொறுப்புகளை வழங்குவது என்பது கட்சித் தலைமை எடுக்க வேண்டிய முடிவு. உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பது கட்சியில் ஒருமித்த கருத்தாக உள்ளது. அவருக்குப் பொறுப்பைக் கொடுக்கலாமா என்பதை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்,” என்று கூறினார்.