மிர்பூர் : மிர்பூரில் நடைபெற்ற இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்திருந்தது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேசம் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 2வது இன்னிங்சில் அந்த அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 73 ரன்னும், ஜாகீர் ஹசன் 51 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அக்ஷர் படேல் 3 விக்கெட்டும், அஸ்வின், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இதனால் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் 7 ரன்னிலும், கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன்னில் சகீப்-அல்-ஹசன் பந்தில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியளித்தனர். அடுத்து வந்த புஜாரா 7 ரன்களில் ஸ்டெப்ம்பிங் முறையில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அக்சர் படேல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார். இதனால், இந்திய அணி 37 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி மூவரையும் சுழற்பந்து வீச்சாளர் மெகிதி ஹசன் மிராஸ் அவுட்டாக்கினார்.
நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்து இருந்தது. அக்ஷர் படேல் 26 ரன்னும், ஜெய்தேவ் உனட்கட் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் வெற்றிக்கு மேலும் 100 ரன்கள் தேவைப்பட்டது. 6 விக்கெட் கைவசம் வைத்திருந்த இந்தியா தொடர்ந்து ஆடியது.
அதேநேரத்தில் 6 விக்கெட்டை சாய்த்தால் வெற்றி என்ற குறிக்கோளுடன் வங்காளதேசம் தொடர்ந்து பந்து வீசியது.
மெகிதி ஹசன் மிராஸ் தொடர்ந்து அபாரமாக பந்து வீசி இந்திய அணி வீரர்களை திக்கு முக்காட வைத்தார்.
ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரில் ஜெய்தேவ் உனட்கட் 13 ரன்னில் சகீப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து, முதல் இன்னிங்சில் 93 ரன் குவித்த ரிஷப் பண்ட் ஆட வந்தார். 9 ரன்னில் வெளியேறி அவரும் அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து அக்ஷர் படேலும் 34 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்த இருவரையும் மெகிதி ஹசன் மிராஸ் வீழ்த்தினார்.
74 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
8வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன்- அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவருமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி தொடக்கத்தில் ஒவ்வொரு ரன்னாக எடுத்த நிலையில், நேரம் செல்ல செல்ல பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டனர். இருவரின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறியது. இந்திய அணி 47வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை ருசித்தது. அஸ்வின் 62 பந்துகளில் 42 ரன்களுடனும் (4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 46 பந்துகளில் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.